ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
வேலூர் அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள், மகப்பேறு உதவியாளர் உள்பட 4 பேர் பணி ஓய்வு பெற்றனர். பணி ஓய்வு பெறும் நாளன்றே அவர்களுக்கான அனைத்து பணி பலன்களை வழங்க மாநகராட்சி மேயர் சுஜாதா நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அவர்களுக்கான பி.எப். தொகை மற்றும் ஈட்டிய விடுப்பு தொகை உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூ.32 லட்சத்து 6 ஆயிரம் அவர்களிடம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வழங்கினார். மேலும் அவர்களின் பணிகளை பாராட்டி கவுரவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் பணி ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பணிபலன்களும் ஊழியர்களுக்கு முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறப்பு சேம நல நிதியும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம், வேலூர் அண்ணாசாலை பழைய மீன் மார்க்கெட் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பலர் பழக்கடைகள் வைத்துள்ளனர். இதுகுறித்து புகார்கள் வருகிறது. எனவே அந்த கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றார்.