கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் ம.தி.மு.க. சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்துக்கு பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கையெழுத்து படிவத்தில் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நல்லக்கண்ணு பேசியதாவது:-
அரசுக்கு நெருக்கடி கொடுப்பதா?
இப்போதைய சூழலில் கவர்னருக்கு எதிராக ம.தி.மு.க. மேற்கொண்டிருக்கும் இந்த கையெழுத்து இயக்கம் மிக தேவையானது. அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் என்பவர் மதசார்பின்றி செயல்பட வேண்டும். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி, நாள்தோறும் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். எனவே இதற்கு எதிராக ஜனநாயக சக்திகளை வலுப்படுத்த வேண்டும். தனது பொறுப்பு என்ன என்பதையே மறந்து, அப்பொறுப்பின் மீது தனி ஆதிக்கம் செலுத்தி, அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அவரை அப்பதவியை விட்டு நீக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் தங்கள் ஆதரவை தரவேண்டும். இந்த முயற்சியை மேற்கொண்ட வைகோவுக்கு என் பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நம்பர் ஒன் விரோதி
வைகோ பேசியதாவது:-
தமிழக வரலாற்றில் எந்த கவர்னரும் செய்யாத அக்கிரமங்களை, அநியாயங்களை கவர்னர் ஆர்.என்.ரவி செய்து வருகிறார். அரசு தயாரித்து தந்த கவர்னர் உரையை மாற்றி பேசினார். பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயரை வாசிக்காமல் அவமதிப்பு செய்தார். சட்ட மசோதாக்களை வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார். மார்க்சிஸம் காலாவதியாகிவிட்டது என்றார். மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு அரசுக்கு நம்பர் ஒன் விரோதியாக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்துக்கும் விரோதியாக செயல்படுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி 1 கோடி கையெழுத்து இயக்கத்தை இன்றைக்கு தொடங்கியிருக்கிறோம். மக்களை தேடி ம.தி.மு.க.வினர் கையெழுத்து பெற்று, ஜனாதிபதிக்கு அனுப்புவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, மாவட்ட செயலாளர்கள் கழககுமார், ஜீவன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.