கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கி 21 நாட்கள் நடக்கிறது.
கோமாரி நோய் தடுப்பூசி
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப்பணி நாளை (புதன்கிழமை) முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி போடப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு போட்டு கொள்ள வேண்டும். அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம், முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரம் தெரிவிக்கப்படும்.
105 தடுப்பூசி குழுக்கள்
இத்தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்து சென்று நாளை முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.