மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு முகாம்
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு முகாம் நடந்தது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீடு முகாம் நேற்று நடந்தது. இதில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி ஆகிய தாலுகா அலுவலகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தை சேர்ந்த சிறப்பு மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, கை, கால் போன்ற உதவி உபகரணங்கள் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீடு செய்தனர். இது தவிர பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணம், நவீன மடக்கு ஊன்று கோல், மூன்று சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள் மற்றும் நடை பழகு உபகரணம், காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, பிரெய்லி கை கடிகாரம், புற உலக சிந்தனையற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உபகரணங்கள், தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான பெட்டகம் போன்றவை வழங்குவதற்காக சோதனை மற்றும் அளவீடு செய்தனர்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.