உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) கே.குமரன் தலைமை தாங்கினார். தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், ஒன்றிய ஆணையாளர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர் கே.சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் வயலூர் சதாசிவம், முத்தகரம் பழனிசாமி, வேட்டவலம் மணிகண்டன், சோமாசிபாடி சிவக்குமார், நீலந்தாங்கல் பாரதியார், கணியாம்பூண்டி வரதராஜன், கருங்காலிகுப்பம் ஏழுமலை, கீக்களூர்சாரதி, வேடநத்தம் முத்துக்குமரன், செல்லங்குப்பம் செந்தில்குமார் உள்பட பலரும் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், ஜமீன் கூடலூர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கரும்பு ஊக்க தொகையை விரைந்து வழங்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சாலைகளை சீரமைக்க வேண்டும்
சந்தைகளில் எந்த அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது என்ற விளக்கம் தேவை. பன்னியூரில் வீடு கட்டாமல் நிதி இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும். அகரம் கிராமத்தில் சிறுபாலம் அமைக்க வேண்டும். நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு அகற்றிய விவரம். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
வேளாண் துறையில் தரமான விதைகளை வழங்கவும், முளைப்பு திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். உரிய காலத்தில் விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதைப்பண்ணை அமைத்துள்ளவர்கள் பெயர் பட்டியலை அலுவலகத்தில் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், உலர்களங்கள் புதிதாக அமைத்துத்தர வேண்டும்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.
அதனைத் தொடர்ந்து கால்நடை, பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளித்தனர். முடிவில் உதவி வேளாண் அலுவலர் சாந்தகுமார் நன்றி கூறினார்.