மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை: காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு


மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை: காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் 104 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

சிறப்பு மருத்துவ முகாம்

காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள கிராமங்கள் மற்றும் காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்பு உள்ள கிராமங்களை கண்டறிந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 7 முகாம் வீதம் 14 வட்டாரங்களிலும் மற்றும் ஆவடி மாநகராட்சியிலும் மொத்தம் 104 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம் நடைபெறும் கிராமங்களில் கொசுப் புழு ஒழிப்பு பணியும் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா 40 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தி கொண்டு வருகிறார்கள். மேலும் ஆவடி மாநகராட்சியிலும், திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி நகராட்சிகளிலும் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டெங்கு கொசு பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை செய்து கொண்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இம்முகாம் நடைபெறும் இடங்களில் காய்ச்சல் மற்றும் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்திடவும், ரத்தப் பரிசோதனைகள் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை

இம்முகாம்களை பயன்படுத்தி காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படியும் தங்கள் வீட்டிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும் கொசுப்புழு உருவாவதை தடுக்க மழைநீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தியும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் நாள்தோறும் நடக்க உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கலெக்டர் ஆய்வு

திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா, காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதா என கண்டறிய சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாம்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர். கே.ஆர்.ஜவஹர்லால், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா, நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story