குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
x

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு

இளஞ்செழியன் (தி.மு.க.):- திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட 54 வருவாய் கிராமங்களை ஒன்றிணைத்து திருமருகலை மையமாகக் கொண்டு சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும், ஒன்றியத்தில் பல பகுதிகளில் நிலவி வரும் மின் தட்டுப்பட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆரூர் மணிவண்ணன் (தி.மு.க.):- திருமருகலில கல்வி நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். ஒன்றியத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பயத்தாங்குடி ஊராட்சி நித்தியபேட்டையில் சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும், திருமாளம்பொய்கையில் சமுதாய கழிப்பறை அமைத்து தர வேண்டும் என்றார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

சரவணன் (தி.மு.க.):- எரவாஞ்சேரியில் பள்ளி கட்டிடம் இன்றி தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.21 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கிய முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

ராதாகிருட்டிணன் (தலைவர்):- திருமருகல் ஒன்றியத்தில் மின் ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றியத்திற்குட்பட்ட 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story