வண்டல் மண் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை


வண்டல் மண் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை
x

வண்டல் மண் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், விவசாயத்துறை இணை இயக்குனர் உத்தண்டராமன், அரசு அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே புலியூரான், சிவகாசி அருகே பாறைப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாகவும் கண்மாய்கள் வழியாகவும் குவாரிகள் சார்பில் பாதைகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குவாரிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு வண்டல் மண் கிடைக்காத நிலையில் தனியார் வண்டல் மண்ணை விற்பனை செய்யும் நிலை தொடர்வதால் விவசாயிகளுக்கு வண்டல்மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்காய் கொள்முதல் விற்பனைக்குழு மூலம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் விஜய முருகன் வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு வண்டல்மண் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் வெள்ளரிக்காய், அதலக்காய், கொடுக்காய் புளி, சப்போட்டா, மாம்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாய சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா கேட்டுக் கொண்டார். மேலும் மாம்பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பஞ்சு விற்பனையை இ நாம் திட்டம் மூலம் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர் முத்தையா தேங்காய் கொள்முதலை விற்பனை குழு மூலம் வத்திராயிருப்பு பகுதியிலேயே செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். விவசாய சங்க பிரதிநிதி அம்பலவாணன் நேரடி நெல் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நெல் கொள்முதல் ஜூன் மாதம் தொடங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story