கூரியர் மூலம் கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை
கூரியர் மூலம் கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை
கோவை
கோவை மாவட்டத்தில் கூரியர் மூலம் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்து உள்ளார்.
செல்போன்கள் மீட்பு
கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு 104 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.1¼ கோடி மதிப்பிலான காணமல் போன 750 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சூதாட்டம், திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1,550 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 310 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டு 68 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லெட்களின் மதிப்பு ரூ.27¾ லட்சம் ஆகும்.
போக்சோ வழக்கு
நடப்பாண்டில் 23 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2 போக்சோ வழக்கில் குற்றவாளிளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள், 2 பேர் போக்சோ வழக்கிலும், 5 பேர் திருட்டு, வழிப்பறி வழக்கிலும் தொடர்புடையவர்கள்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆன்லைன் மூலம் ரசாயணம் மற்றும் வேதிப்பொருட்கள் வாங்குபவர்களை கண்காணித்து வருகிறோம். இதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் வேதிப்பொருட்களை வாங்கியது தெரியவந்தது. விசாரணையில் அவர் விவசாயி என்பதும், விவசாய பணிகளுக்காக வேதிப்பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.
கஞ்சா சாக்லெட்டுகள்
சமீபத்தில் பெரியநாயக்கன்பாளையம், சூலூர் பகுதியில் கூரியர் சர்வீசை பயன்படுத்தி வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு கஞ்சா சாக்லெட்டுகள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இதுபோன்று கஞ்சா சாக்லெட்டுகள் கடத்தப்படுவதை தடுக்க கூரியர் நிறுவன ஊழியர்களை அழைத்து தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 250 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமமாக போலீசாருடன் இணைந்து கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.