கடலோர கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன்


கடலோர கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன்
x
தினத்தந்தி 12 Aug 2023 7:15 PM GMT (Updated: 12 Aug 2023 7:16 PM GMT)

கடலோர கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

மயிலாடுதுறை

கடலோர கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

மீனவர்கள் ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க. சார்பில் மாவட்ட அளவிலான மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மீனவர்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை

மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக கொடுத்துள்ளீர்கள். இதனை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு தற்போது கடலோர கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

உப்பு நீர் ஊருக்குள் புகாத வகையில் உப்பனாற்றில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. துறைமுகங்கள் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மீனவர்கள் மாநாடு

மீனவர் நலன்களை பாதுகாக்கும் வகையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ராமேசுவரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், விஜயகுமார், மலர்விழி மற்றும் 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story