தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை; சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தகவல்
குற்றாலத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.
குற்றாலத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.
சட்டமன்ற உறுதிமொழி குழு
தென்காசி மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்தது. மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் மற்றும் குழு உறுப்பினர்களான அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், ஜெயக்குமார் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
இந்தக் குழுவினர் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டனர். குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தை புதுப்பித்தல் பணி நிறைவடைந்து அரங்கம் பயன்பாட்டில் இருப்பதை பார்வையிட்டனர்.
பணிகள் ஆய்வு
குற்றாலத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கு உள்ள விடுதியை புதுப்பிக்கும் பணியை பார்வையிட்டனர். தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி அருகில் கூடுதலாக பெண்கள் உடை மாற்றும் அறை, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட கட்டுமான பணிகளையும் புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தனர்.
நிவாரண தொகை
பின்னர் குழு தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-
தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓய்வு இல்லங்கள் அமைப்புசாரா தொழிலாளர் குறைந்த வாடகையில் அங்கு தங்குவதற்கான பணிகள் ரூ.1.82 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்துள்ளோம். மெயின் அருவி பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கோவில் சுற்றுச்சுவர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி இருக்கிறது. அவர்களுக்கு அறநிலைய துறையும், தமிழக அரசும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.