குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
சிலுக்குவார்பட்டி அருகே குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி அருகே பாப்பன்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் திம்மராய பெருமாள் கோவில், மல்லீஸ்வரர் கோவில், பிரத்யங்கரா கோவில், பாப்பாத்தி அம்மாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. வைகை அணையில் இருந்து 58 கிராம கூட்டு குடிநீர் திட்டத்தில் நீர்உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளப்பகுதியில் சிலுக்குவார்பட்டி செல்லும் சாலையில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. பாலம் அருகே குளத்தில் கோழி இறைச்சி கழிவுகளை சிலர் ெகாட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குளத்தின் நீரை ஆடு, மாடுகள் குடிகின்றன. அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் பாப்பன்குளத்தில் குளித்து வருகின்றனர். இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் குளத்தின் நீர் மாசு அடைந்து வருகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.