வாலிபரை கல்லால் தாக்கிய மெக்கானிக் கைது
வாலிபரை கல்லால் தாக்கிய மெக்கானிக் கைது
சிங்காநல்லூர்
கோவை சிங்காநல்லூர் நீலிகோனாம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரபிரபு (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் உறவினர் மெக்கானிக் தினேஷ் (21) என்பவர், தனது உறவுக்கார பெண்ணை காதலிப்பதை கைவிடும்படி எச்சரித்தார். ஆனால் ஹரிஹரபிரபு இளம்பெண்ணுடனான காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார்.
இது தொடர்பாக ஹரிஹர பிரவுக்கும், தினேசுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த 1-ந் தேதி ஹரிஹரபிரபு நீலிகோனாம்பாளையத்தில் உள்ள டெய்லர் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த தினேசுக்கும், அவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ் தகாத வார்த்தைகளால் பேசி ஹரிஹரபிரபுவை செங்கல்லை எடுத்து தாக்கினார்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் தினேசை கைது செய்தனர்.