தாரமங்கலம் அருகேகிணற்றில் அழுகிய நிலையில் மெக்கானிக் பிணம்இறந்தது எப்படி? போலீசார் விசாரணை


தாரமங்கலம் அருகேகிணற்றில் அழுகிய நிலையில் மெக்கானிக் பிணம்இறந்தது எப்படி? போலீசார் விசாரணை
x
சேலம்

தாரமங்கலம்

தாரமங்கலம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மெக்கானிக் பிணம் கிடந்தது. அவர், இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிணற்றில் பிணம்

தாரமங்கலம் அருகே தெசவிளக்கு கூடாரமேடு பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சங்கர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்புதுறையினர் வரவழைக்கப்பட்டனர்.

கிணற்றில் மிதந்த உடலை கயிறு கட்டி மீட்டனர். பிணமாக கிடந்தவர் குறித்து விசாரணை நடத்திய போது, அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் குமார் (வயது 34) என்பது தெரிய வந்தது.

தாய், தந்தையை இழந்தவர்

குமாரின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டாராம். தொடர்ந்து குமார் தாயுடன் வசித்து வந்தார். தாயாரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக குமார் மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளர். பொக்லைன் எந்திரம் பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை செய்துவந்துள்ளார்.

மேலும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயமும் செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்தது எப்படி?

குமார் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும், அவருக்கு நீச்சல் தெரியும் எனவும் கூறப்படுகிறது. எனவே அவர், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு இறந்தாரா, அல்லது குளிக்கும் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது இன்னும் தெரியவில்லை.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story