பதக்கம் பெற்றவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பதக்கம் பெற்றவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

3 சதவீத இட ஒதுக்கீடு

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கீழ்க்காணும் விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.

கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.

சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டு தோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள்.

சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுக்கள் மற்றும் காதுகேளாதோர் விளையாட்டுக்கள் உலக தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள் மட்டும்).

தேசிய விளையாட்டுப் போட்டிகள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள் மட்டும்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகியவை தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

விண்ணப்பங்கள் பதிவிறக்கம்

மேலும் 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழுத்தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டினை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story