பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்
பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மாநில துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்-யூத் 16 வயது வரை, யூத் 19 வயது வரை, ஜூனியர் 21 வயது வரை, சீனியர் 21 முதல் 45 வயது வரை, மாஸ்டர் 45 முதல் 60 வயது வரை மற்றும் சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்
பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதன் பரிசளிப்பு விழா ரைபிள் கிளப் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. தேவாரம், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.
பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற 56 பேருக்கு தங்க பதக்கமும், 55 பேருக்கு வெள்ளி பதக்கமும், 51 பேருக்கு வெண்கல பதக்கமும் என 162 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன், பொருளாளர் சிராஜூதீன், நிர்வாகக்குழு உறுப்பினர் இளமுருகன், கிளப் தலைமை அதிகாரி சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று, இறுதி நாளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.