ரைபிள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்


ரைபிள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்
x

ரைபிள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

திருச்சி

மாநில துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் திருச்சி ரைபிள் கிளப் சார்பில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பிஸ்டல் பிரிவு போட்டிகள் 28-ந் தேதியுடன் முடிவடைந்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து 29-ந் தேதி முதல் நேற்று வரை ரைபிள் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்தது. இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "திருச்சியில் ரைபிள் கிளப் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்-வீராங்கனைகள் வருங்காலங்களில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்" என்றார்.

திருச்சியில் தென்னிந்திய போட்டி

கவுரவ விருந்தினராக தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க தலைவர் டி.வி.சீதாராமராவ் கலந்து கொண்டு பேசுகையில், "கடந்த ஆண்டில்தான் திருச்சியில் ரைபிள் கிளப் தொடங்கினர். பின்னர் சில மாதங்களிலேயே மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சிறப்பாக நடத்தி உள்ளார்கள். இந்த போட்டியில் அதிக எண்ணிக்கையில் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று இருப்பது சாதனையாகும்.

தென்னிந்திய துப்பாக்கி சுடும் போட்டி வரும் செப்டம்பரில் திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரைபிள் பிரிவு போட்டிகள் திருச்சியில் நடக்கிறது. பிஸ்டல் பிரிவு போட்டி கேரளாவில் நடக்கிறது. இதேபோல் செப்டம்பர் மாத இறுதியில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்" என்றார்.

537 பேருக்கு பதக்கங்கள்

இந்த போட்டியில் 192 பேருக்கு தங்கப்பதக்கமும், 180 பேருக்கு வெள்ளிப்பதக்கமும், 165 பேருக்கு வெண்கல பதக்கமும் என மொத்தம் 537 ேபருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க செயலாளர் வேல்சங்கர், தேசிய ரைபிள் கிளப் கவுரவ செயலாளர் ரவிகிருஷ்ணன், திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளப் பொருளாளர் சிராஜூதீன் நன்றி கூறினார்.


Next Story