6 ஆயிரம் பேருக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை
6 ஆயிரம் பேருக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
6 ஆயிரம் பேருக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மிகப்பெரிய சாயப்பட்டறை
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:- 1993-ம் ஆண்டு கே.எம்.நிட்டிங் நிறுவனத்தை எனது பங்குதாரருடன் சேர்ந்து தொடங்கினேன். மொத்த முதலீடே ரூ.2 லட்சம் தான். ஆளுக்கு ரூ.1 லட்சம் போட்டு தொழிலை தொடங்கினோம். 1996-ம் ஆண்டு ஏற்றுமதி துறையில் காலடி எடுத்து வைத்தேன். 6 நிட்டிங் எந்திரங்களை வைத்து தொழிலை தொடங்கினோம். 1996-97-நிதியாண்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் மொத்த வர்த்தகம் மேற்கொண்டோம். 1997-ம் ஆண்டு முதல் தொழில் வளர்ச்சியடைந்தது. 2000-ம் ஆண்டு யூனிட்டை விரிவாக்கம் செய்தோம். 2004-ம் ஆண்டு பொங்கலூர் அருகே ஜெய்விஷ்ணு பிரிண்ட்டெக்ஸ் என்னும் நூற்பாலையை தொடங்கினோம். 36 ஆயிரம் கதிர்களுடன், நாளொன்றுக்கு 30 டன் நூல் தயாரிக்கப்பட்டது.
2008-ம் ஆண்டு திருப்பூர் மாநகரில் சாயக்கழிவுநீர் பிரச்சினை ஏற்பட்டு கோர்ட்டு உத்தரவின் பேரில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. அப்போது சாயப்பட்டறைகள் இல்லாததால் எங்களுக்கு ஆர்டர் கொடுக்கும் பையர்கள் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்துடன் சாயப்பட்டறையை சொந்தமாக தொடங்கினோம். நாளொன்றுக்கு 10 டன் சாயமேற்றினோம். இன்று நாளொன்றுக்கு 50 டன் துணிக்கு சாயமிடும் வகையில் திருப்பூரிலேயே மிகப்பெரிய சாயப்பட்டறையாக உள்ளது.
மின்மயானம்
2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பசுமை விருது எங்கள் சாயப்பட்டறைக்கு கிடைத்தது. முதல்-அமைச்சரிடம் முதன்முறையாக சாயப்பட்டறைக்கு விருது பெற்றோம். இப்போது கே.எம்.நிட்வேர் குழுமத்தில் 14 யூனிட்டாக வளர்ச்சியடைந்துள்ளது. 6 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். சாயப்பட்டறை, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் என ஆண்டுக்கு மொத்தம் ரூ.750 கோடி வர்த்தகம் நடக்கிறது.
திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தில் 20 வருடமாக இணைந்துள்ளேன். 2016-ம் ஆண்டு சங்கத்தின் தலைவராக இருந்தேன். நான் பிறந்த ஊருக்கு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் ரூ.4½ கோடியில் கொடுவாயில் மின்மயானம் சொர்க்கம் என்ற பெயரில் அமைக்கப்பட்டது. நான் கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். அந்த பள்ளியை தத்தெடுத்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கலையரங்கம், கழிப்பிட கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. பள்ளிக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
இலவசமாக டயாலிசிஸ்
வடக்கு ரோட்டரி சங்கத்தின் நகர அறக்கட்டளையின் சார்பில் மாநகராட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, கருவம்பாளையம் மின்மயானத்தை பராமரிக்கிறோம். திருப்பூர் ரெயில் நிலையம் முன் டயாலிசிஸ் மையம் 20 எந்திரங்களை அமைத்து, இதுவரை 6 ஆயிரம் பேருக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்து சமூக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.