தினந்தோறும் 3 இடங்களில் மருத்துவ முகாம்
வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி காரணமாக கிணத்துக்கடவு பகுதியில் தினந்தோறும் 3 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் தினசரி 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாமில் 784 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 121 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா கூறியதாவது:-
சுகாதாரத்துறை அறிவுரையின்படி கிராமங்கள் தோறும் தினசரி 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.