காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் எலி மருந்து சாப்பிட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மகள் லித்திகா (வயது 22). இவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
லித்திகா, கடந்த 6 ஆண்டுகளாக பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் அறிந்த அவரது பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
தற்கொலை
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லித்திகா, கடந்த 6-ந் தேதி வடபழனியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்்கு செல்வதாக கூறிவிட்டு மொபட்டில் சென்றார். செல்லும் வழியிலேயே எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். பாட்டி வீட்டுக்கு சென்றதும், தான் எலி மருந்து சாப்பிட்டதாக தெரிவித்தார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், லித்திகாவை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று லித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.