அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை


அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு, மருத்துவ காப்பீடு அட்டைகளை, கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

ராணிப்பேட்டை

குறை தீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, கடன் உதவி, வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், கிராம பொதுப் பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநல மனுக்கள் வழங்கினர். மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மருத்துவ காப்பீடு அட்டை

கூட்டத்தில் கலெக்டர் தனது சொந்த கொடை நிதியில் இருந்து நலிந்தோர், திருநங்கை, இருளர் என 13 பேருக்கு சுயதொழில் நிதியுதவியாக ரூ.65 ஆயிரம் வழங்கினார். மேலும் ராணிப்பேட்டை காரை பகுதியில் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (பொது) முரளி சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையர் வரதராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story