மருத்துவ சேவையில் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது
மருத்துவ சேவையில் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேசினார்.
காரைக்குடி
மருத்துவ சேவையில் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேசினார்.
நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள்
தமிழக முதல்-அமைச்சர் சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலையில் காரைக்குடி நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 போன்ற மகத்தான திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்றவைகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் வசதிக்கேற்ப கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக
முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் தமிழக மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி முதற்கட்டமாக ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியில் கழனிவாசல், கணேசபுரம், தேவகோட்டையில் ராம்நகர், சிவகங்கையில் ஆவரங்காடு பகுதிகளில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் முதற்கட்டமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்பட்டு மக்களுக்கு சேவைபுரியும்.
அனைவருக்கும் சுகாதார உரிமைகளை அளித்தல் என்ற அடிப்படையில் நிலையான வளர்ச்சி இலக்கினை நோக்கி இதுபோன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவ சேவையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
தொடர்ந்து 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 5 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத், மாங்குடி எம்.எல்.ஏ., சுகாதார துறை இணை இயக்குனர் விஜயசந்திரன், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் வீரமுத்துகுமார், காரைக்குடி நகர் மன்ற துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.