வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x

வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டராக பணிபுரிய அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை,

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டராக பணிபுரிவதற்கான அரசாணையை வெளியிடக் கோரி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவு தலைவர் ராகவன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வெளிநாட்டு பிரிவு செயலாளர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயிற்சி டாக்டர்கள்

வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்த 800-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டராக பணிபுரிவதற்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு கடந்த ஜூலை 29-ந்தேதி, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த தமிழக மாணவர்கள் ஆஸ்பத்திரிகளில் பயிற்சி டாக்டராக சேர்வதற்கான ரூ.2 லட்சம் கட்டணத்தை நீக்கி அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்தது.

ஆனால் 3 மாதம் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் பயிற்சி மருத்துவராக பணிபுரிய முடியாமல் தவித்து வருகின்றனர். பயிற்சி டாக்டர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கால உதவி ஊதியத்தையும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அறிவித்தபடி அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கைபடி வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு பயிற்சி கால ஊதியம் வழங்க வலியுறுத்தியும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

1 More update

Next Story