மனநலம் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு மருத்துவ சிகிச்சை


மனநலம் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு மருத்துவ சிகிச்சை
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:15:05+05:30)

விக்கிரவாண்டி ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு மருத்துவ சிகிச்சை விழுப்புரம் கலெக்டர் நடவடிக்கை

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியோருக்கான இல்லம் உள்ளது. இங்கிருந்த ஜாபருல்லா மாயமானது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் ஆதரவற்றோர் இல்லத்தில் விசாரணை நடத்தினர். அப்போது இங்கு 130 ஆண்கள், 27 பெண்கள் மற்றும் 27 பணியாளர்கள் என மொத்தம் 184 பேர் தங்கியிருப்பதும், இவர்கள் அடிப்படை வசதி இன்றி சுகாதார மற்ற முறையில் இருந்ததையும், 17 பேர் மாயமாகி இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியதின் பேரில் முதற்கட்டமாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அடிப்படையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க கலெக்டர் பழனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ குழுவினர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்து அங்கிருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வந்த மருத்துவ குழுவினர் சிகிச்சைக்காக ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 120 பேரை நாள் ஒன்றுக்கு 10 பேர் வீதம் தனித்தனி குழுவாக பிரித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அதன்படி விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் தலைமையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், கெடார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், நாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரை கொண்ட 15 பேர் குழுவினர் மன நலம் பாதிக்கப்பட்ட 10 பேரை வேனில் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மன நல பிரிவு துறைத்தலைவர் டாக்டர் புகழேந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ந்து 2-வது நாளாக ஆதரவற்றோர் இல்லத்தில் அதிகாரிகள் முகாமிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story