சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
ஆனைமலை அருகே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது.
ஆனைமலை
ஆனைமலை அருகே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது.
எரிப்பதால் வெளியேறும் நச்சு புகை
ஆனைமலையை அடுத்த தேவிபட்டம் பகுதியில் இருந்து சேத்துமடை பகுதிக்கு சாலை செல்கிறது.
இந்த சாலையில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். மேலும் ஏராளமான வாகனங்களும் இயக்கப்படுகிறது.
அந்த சாலையோரத்தில் சிலர் இரவு நேரங்களில் காலாவதியான மருந்து பொருட்களை கொட்டி செல்கின்றனர். குப்பைகளுடன் சேர்த்து கொட்டப்படுவதால், அவை மொத்தமாக தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதிலிருந்து வெளியாகும் நச்சு புகையை சுவாசித்தால், மூச்சுதிணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கேரளாவில் இருந்து தமிழக எல்லையோர பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்வது தொடர் கதையாகி வருகிறது. தற்போது சேத்துமடை செல்லும் சாலையோரத்தில் காலாவதியான மாத்திரைகள், சொட்டு மருந்துகள், சத்து பவுடர்கள் கொட்டப்பட்டு, குவிந்து கிடக்கின்றன. அவை தீ வைத்து எரிக்கப்படுவதால், அந்த வழியாக செல்பவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர்களிடம் தெரிவித்தாலும், கண்டு கொள்வதில்லை. எனவே உரிய ஆய்வு நடத்தி மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.