மருத்துவ காப்பீடு திட்ட ஆண்டு விழா
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழா நேற்று நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழா நேற்று நடந்தது.விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார். விழாவில், இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசு பொருட்கள், 15 பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய 2 அரசு ஆஸ்பத்திரிகள், 2 தனியார் ஆஸ்பத்திரிகளின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இதில், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி காப்பீடு திட்ட பொறுப்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், பெரியகுளம் தலைமை ஆஸ்பத்திரி டாக்டர் குமார், மாவட்ட திட்ட அலுவலர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.