மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபம் விரைவில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்- மதுரை ஐகோர்ட்டில் தகவல்
மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபம் விரைவில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபம் விரைவில் புதுப்பிக்கப்பட்டு ெபாதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
புது மண்டபம்
மதுரையைச் சேர்ந்த மணிபாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில். இந்த கோவிலின் அருகில் அமைந்து உள்ள புதுமண்டபம் பாரம்பரியம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த புது மண்டபத்தில் பழங்கால சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு துணிகள், புத்தகங்கள், வளையல், சந்தன கட்டை போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருந்து வந்தன.
இந்தநிலையில் புது மண்டபத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, அங்கு செயல்பட்டு வந்த 300 கடைகள் குன்னத்தூர் சத்திரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
புனரமைப்பு
ஆனால் புதுமண்டபத்தில் இதுவரை எந்தவிதமான புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல், மூடப்பட்டு கிடக்கிறது. மீனாட்சி அம்மன் கோவிலை காண வரும் சுற்றுலாப் பயணிகள், புதுமண்டபத்தை பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
எனவே புதுமண்டபத்தை விரைவாக புனரமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், புதுமண்டபத்தை மேம்படுத்தும் பணிகளை நடத்துவதற்காக தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டு இந்த பணிகளுக்காக ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான அங்கீகாரம் பெறுவதற்காக நிலுவையில் உள்ளது.
இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதுமண்டபம் கொண்டு வரப்படும் என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.