மீனாட்சி அம்மன் கோவில் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படும் காளக்கோவிலின் தற்போதைய நிலை என்ன?-அதிகாரிகள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மீனாட்சி அம்மன் கோவில் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படும் காளக்கோவிலின் தற்போதைய நிலை என்ன? அதிகாரிகள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படும் காளக்கோவிலின் தற்போதைய நிலை என்ன? அதிகாரிகள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
திருவிளையாடல்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருவிளையாடல்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் மண்டகப்படிகள் உள்ளிட்டவை, தெப்பக்குளங்கள் உள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தை மாத தெப்பத்திருவிழாவில் வலைவீசி திருவிளையாடல் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சி வலைவீசி தெப்பக்குளம் மற்றும் காளக்கோவில் வளாகத்தில் நடந்து வந்தன. நாளடைவில் பழமையான வலைவீசி தெப்பக்குளமும், அதன் கரையில் அமைந்து இருந்த காளக்கோவிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. பழமையான வலைவீசி தெப்பக்குளம் மற்றும் காளக்கோவிலை மீட்டு, மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
ஆய்வு நடத்த உத்தரவு
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மீனாட்சி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை அறக்கட்டளை பெயரில் மாற்றி தனி நபருக்கு விற்பனை செய்து உள்ளனர். இதுசம்பந்தமாக சிவில் வழக்கில் கோவில் நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்க்காமல் மற்றொரு தரப்புக்கு சாதகமான உத்தரவு பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தெப்பக்குளம் சம்பந்தமாக அறநிலையத்துறை விசாரிக்கலாம். மனுதாரர் தெரிவிக்கும் தெப்பக்குளமும், காளக்கோவிலும் இருந்தனவா? தற்போது அவற்றின் நிலை என்ன? என மதுரை மாவட்ட கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனர் ஆகியோர் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.