மாரண்டஅள்ளி அருகேஊராட்சி மன்ற தலைவர் வராததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்


மாரண்டஅள்ளி அருகேஊராட்சி மன்ற தலைவர் வராததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 16 Aug 2023 1:00 AM IST (Updated: 16 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வராததால் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து திரும்பி சென்றனர்.

கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராமசபை கூட்டம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நீண்ட நேரம் ஆகியும் ஊராட்சி மன்ற தலைவி ஜோதிமணி கூட்டத்திற்கு வரவில்லை. மேலும் 2 அதிகாரிகளை தவிர மற்ற துறை அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அதிகாரிகள் வர வேண்டும் என பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

புறக்கணிப்பு

இதனிடையே ஊராட்சி செயலாளர் ஏற்கனவே எழுதி வரப்பட்ட தீர்மானத்தில் பொதுமக்களை வற்புறுத்தி கையெழுத்து பெற முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கையெழுத்து போடாமல் கூட்டத்தை புறக்கணித்து திரும்பி சென்றனர். இதன் காரணமாக கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பொதுமக்கள் கூறுகையில் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, தெரு சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை தேவைகளையும் செய்து தருவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த முறை கிராமசபை கூட்டத்திற்கும் தலைவர் வரவில்லை. தலைவர், அதிகாரிகள் இல்லாமல் ஊராட்சி செயலாளரை வைத்து தீர்மானங்களை நிறைவேற்றி வரும் ஊராட்சி தலைவரை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.


Next Story