சுதந்திர தின விழாவையொட்டிஅனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்பொம்மஅள்ளியில் கலெக்டர் பங்கேற்பு


சுதந்திர தின விழாவையொட்டிஅனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்பொம்மஅள்ளியில் கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Aug 2023 1:00 AM IST (Updated: 16 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சுதந்திர தின விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. பொம்மஅள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டனர்.

சிறப்பு கிராம சபை கூட்டம்

சுதந்திர தின விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்ற கூட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். இதில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து பேசினர். இந்த கூட்டங்களில் பொது செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிறப்பு நிகழ்வாக கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலெக்டர் பங்கேற்பு

காரிமங்கலம் ஒன்றியம் பொம்மஅள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தர்மபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகின்றது. அரசு திட்டங்களை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தீபா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பழனியம்மாள், பொம்மஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் தீர்த்தகிரி உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story