சிவகங்கை நகர சபை கூட்டம்


சிவகங்கை நகர சபை கூட்டம்
x

சிவகங்கை நகர சபை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை நகரில் மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மருதுபாண்டியர்கள் சிலை

சிவகங்கை நகர சபை கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, துணைத் தலைவர் கார் கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றதற்கு நகர் மன்றத்தின் சார்பில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தலைவர் துரை ஆனந்த் பேசியதாவது:- மருதுபாண்டியர்களுக்கு சென்னையில் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறோம். இதே போல சிவகங்கை நகரில் மருதுபாண்டியரின் நினைவை போற்றும் வகையில் சிலை அமைக்க அனுமதி தர வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம் என்று பேசினார்.

ராஜினாமா

பின்னர் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் குப்பைகள், கழிவுநீர் கால்வாய்கள், தெருவிளக்குகள், கருவேல மரங்களை அகற்றுதல், திடக்கழிவு வரியை ரத்து செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக பேசினர். அதற்கு தலைவர் துரை ஆனந்த் பதில் அளித்து பேசினார்.

மேலும், உறுப்பினர் மதியழகன் பேசும்போது:- என்னுடைய வார்டில் குப்பைகள் சரிவர வாங்குவது கிடையாது. தெருவிளக்கு எரியவில்லை. நான் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு எந்த உதவியும் என்னுடைய வார்டு மக்களுக்கு செய்ய முடியவில்லை. எனவே என்னுடைய பதவியை ராஜினாமா செய்யலாமா என்று கருதுகிறேன் என்று கூறினார்.

ரசீது

உறுப்பினர்கள் அன்புமணி, ராஜா ஆகியோர் பேசும்போது, பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஏற்கனவே பொதுமக்கள் டெபாசிட் கட்டியுள்ளனர். ஆனால் நகராட்சியில் இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் புதிதாக டெபாசிட் கட்ட வேண்டும் என்று அறிவிப்பு கொடுக்கின்றனர். கேட்டால் நகராட்சியில் பணம் பெற்று கொண்டதற்கான விவரம் எதுவும் இல்லை என்கின்றனர். அந்த தொகை எங்கே சென்றது என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து ஆணையாளர் பாஸ்கரன் பேசுகையில், பொதுமக்கள் ஏற்கனவே கட்டிய ரசீது இருந்தால் அதை கொண்டு வந்து விண்ணப்பம் எழுதி கொடுத்தால் அதை வைத்து தற்போது வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் இருந்து இந்த தொகையை கழித்துக்கொள்கிறோம் என்றார்.



Next Story