ஆய்வுக்கூட்டம்
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நஜிமுதீன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், எம்.பி.க்களிடம் மக்கள் நிறைய நலத்திட்டங்களை எதிர்பார்க்கின்றனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஆண்டுக்கான நிதி ரூ.5 கோடி மட்டுமே. அதில் ஜி.எஸ்.டி. 15 சதவீதம் போக ரூ.4 கோடியே 10 லட்சம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்த நிதியில் உயர் கோபுர மின்விளக்கு, சமுதாயக்கூடம், ரேஷன் கடை, பஸ் நிறுத்தம் போன்ற சிறிய பணிகளை மட்டுமே என்னால் வழங்க முடிகிறது. இப்போது இளையான்குடி பேரூராட்சி தலைவர் ரூ.4 கோடி 10 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை கேட்டு மனு அளித்துள்ளார். எனக்குள்ள முழு தொகையும் எப்படி வழங்க இயலும். இருந்த போதிலும் கலெக்டர், துறை சார்ந்த அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோரிடம் நலத்திட்ட உதவிகளை பெற முயற்சி செய்வேன் என்றார்.
இதில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் அல் அமீன், பேரூராட்சி துணை தலைவர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் குமார், சிறுபான்மை பிரிவு தலைவர் அம்பலம் ராவுத்தர் நெய்னார், நகர செயலாளர் பாண்டி, கவுன்சிலர் ஷேக் அப்துல் ஹமீது, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் ரகூப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.