வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:47+05:30)

கிருஷ்ணகிரியில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு பணிகள், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

அறிவுறுத்தல்

முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்த பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்து, மாத்திரைகளின் இருப்பு பதிவேடு, நோயாளிகளின் வருகைப்பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். அத்துடன் பாம்புகடி மருந்து மற்றும் விஷதன்மை உடைய அவசர சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வேடியப்பன், குமரேசன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நில அளவை உதவி இயக்குனர் சேகரன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலர் முகமது அஸ்லாம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்கீதா, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ரவிச்சந்திரன், தாசில்தார் சம்பத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story