கிருஷ்ணகிரியில்அரசு திட்டங்கள், வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம்கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் பேசியதாவது:-
விரைந்து முடிக்க அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு பணிகள், 15-வது நிதிக்குழு திட்டப்பணிகள், வருவாய் துறை சார்பாக பட்டா வழங்க கோரி நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட அரசு துறை வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நேரில் ஆய்வு
முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ், ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட அரசு திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதே போல் தாலுகா அலுவலகம், ஓசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் ஓசூர் உழவர் சந்தை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நாணயம் செலுத்தி, மஞ்சப்பை பெறும் எந்திரத்தையும், மாநராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் மஞ்சப்பை பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் வரையும் சுவர் ஓவியங்களை பார்வையிட்டார்.






