உற்பத்தியாளர்களுக்குபால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
நஷ்டமடையும் சூழல்
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, வேளாண் இணை இயக்குனர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆவினுக்கு வழங்கப்படும் பாலுக்குரிய கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ராகி கொள்முதல் நிலையங்களுக்கு சாகுபடி செய்யப்பட்ட ராகியை விவசாயிகள் கொண்டு செல்லும்போது அவற்றை பாலிஷ் செய்து எடுத்து வருமாறு கூறுகிறார்கள். இதை தவிர்த்து ராகியை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணிக்காக கரும்பு பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படுகிறது. தொப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளில் கரும்பு எடுத்து வரும் லாரிகளுக்கு வரி வசூலிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கரும்பு லாரிகளுக்கு சுங்கச்சாவடிகளில் வரி விதிப்பில் விலக்கு அளிக்க வேண்டும். கரும்பு பயிரை வெட்டுவதற்கு ஆகும் கூலித் தொகையில் ஒரு பகுதியை அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொப்பையாறு அணை கால்வாயில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் மா உற்பத்தி கணிசமாக குறைந்து வரும் நிலையில் தற்போது பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மருத்துவ குழுவினர் மூலம் உரிய ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பரிந்துரைகளை வழங்க வேண்டும். மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
நிறைவேற்ற நடவடிக்கை
இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் ராகியை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மாலினி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.