நாமக்கல்லில் ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்
நாமக்கல்:
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பெறும் பட்டதாரி ஆசிரியருக்கு பாராட்டு விழா நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மாயகிருஷ்ணன், தேர்தல் ஆணையாளர் சண்முகம், மகளிரணி செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் குணசேகரன், பொருளாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
கூட்டத்தில் தமிழக ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படி உயர்வு 6 மாதம் கழித்தே, தமிழக ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு வழங்கும் நாள் முதலே, தமிழக ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023-2024-ம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல் கலந்தாய்வை வெளிப்படை தன்மையுடன், மே மாதத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.