எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நலனில் கவலை இல்லை-தர்மபுரியில் வைத்திலிங்கம் பேட்டி
தர்மபுரி:
தர்மபுரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நிர்வாகிகள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். நிச்சயம் எங்களுக்கு சாதகமாக நீதி வரும் என நம்புகிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் கூறவில்லை. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும். அதுவரை சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்துவோம். எல்லோரும் ஒன்றிணைவோம் என நாங்கள் கூறுகிறோம். சசிகலா, டி.டி.வி.தினகரன், கே.சி.பழனிசாமி, அன்வர்ராஜா, ஏ.சி.சண்முகம், மட்டுமன்றி ஒதுங்கி நிற்கும் சாதாரண தொண்டர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நலன் பற்றி கவலையில்லை. தான் தலைமையாக இருக்க வேண்டும். கட்சி தனக்கு சொந்தமாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நியாயம், நீதியும், மக்கள் ஆதரவும், தொண்டர்கள் ஆதரவும் எங்கள் பக்கம் உள்ளது. எனவே, நாங்கள் கட்சியை ஒன்றிணைத்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.