ஆவின் பால் கொள்முதல் நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


ஆவின் பால் கொள்முதல் நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஆவின் பால் கொள்முதலுக்கான நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

பால் நிலுவை தொகை

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு அதிக அளவில் பால் வழங்கி வருகிறார்கள். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உரிய நிலுவை தொகையை காலதாமதம் இல்லாமல் விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கால்நடை கடன்

மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலை வாழ்வாதாரமாக நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. எனவே கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக எண்ணிக்கையில் கால்நடை கடன் வழங்க வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கும் போது உள்ளூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தால் அருகே உள்ள மற்றொரு ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

விவசாய பணிகளுக்கு மானிய வாடகையில் டிராக்டர்களை கூடுதலாக வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

சட்டப்படி நடவடிக்கை

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான இயல்பான மழை அளவு 156.9 மி.மீ. ஆகும். இந்த ஆண்டில் இப்போது வரை 168.43 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. விவசாய பணிகளை விவசாயிகள் சிறப்பாக மேற்கொள்ள தேவையான அனைத்து விதமான உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் மூலம் பால் கொள்முதலுக்கான நிலுவை தொகையை வருகிற 31-ந் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நில அளவை பணியில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர்பேசினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மாலினி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story