தர்மபுரியில் நீர் மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் பங்கேற்பு


தர்மபுரியில் நீர் மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 1:00 AM IST (Updated: 20 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்த நீர் மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மத்திய கண்காணிப்பு அலுவலர்கள், கலெக்டர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மத்திய கண்காணிப்பு அலுவலர் செந்தில்ராஜன், தொழில்நுட்ப வல்லுனர் டாக்டர். ஆதிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு செயல்படுத்தப்பட்ட பணிகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்று கூறினார்.

நேரடி ஆய்வு

கூட்டத்தில் மத்திய கண்காணிப்பு குழுவினர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் நீர் மேலாண்மைதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளை அடுத்த 3 நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினர். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்திய கண்காணிப்பு குழுவினர் தருமபுரி ராஜாபேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story