1,057 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,057 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,057 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 31-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்பட 1*057 முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 120 இடங்களிலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகபகுதிகளில் 937 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
ஏற்பாடு
இந்த மையங்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளலாம். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்;. தடுப்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய்த்துறை, ஊரக மற்றும் மாநகராட்சிஅலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, தன்னார்வலர்கள், போலீஸ் துறை பணியாளர்கள் உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சிறப்பு முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண் கொண்டு வந்து பதிவு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி உயிரிழப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.