திண்டுக்கல்லில் மெகா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு


திண்டுக்கல்லில் மெகா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு
x

திண்டுக்கல்லில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை கலெக்டர் விசாகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

கொரோனா 3-ம் அலைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. ஒரு நாளைக்கு 500 பேர் வரையே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தினமும் 1,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகத்திலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்போது அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் திண்டுக்கல் பஸ் நிலையம், ஜி.டி.என். சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி, ரெயில் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டார். அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தப்படுகிறதா? தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறதா? என்பதை மருத்துவ குழுவினர் கண்காணிக்கின்றனரா? என்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகர் நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story