'தேசியம் என்பது தனி திராவிட நாடோ, தனி காலிஸ்தானோ அல்ல'


தேசியம் என்பது தனி திராவிட நாடோ, தனி காலிஸ்தானோ அல்ல
x
திருப்பூர்


தேசியம் என்பது தனி திராவிட நாடோ, தனி காலிஸ்தானோ அல்ல என்று மேகாலய மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசினார்.

குருவந்தனம் நிகழ்ச்சி

தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் குருவந்தனம் நிகழ்ச்சி திருப்பூர் ஆஷர்நகரில் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. வித்யாமந்திர் பள்ளி தாளாளர் விட்டல்ராஜன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். சேவா பாரதி- தென் தமிழ்நாடு மாநிலத் துணைத்தலைவர் ராமசாமி, லகு உத்ேயாக் பாரதி மாநில செயற்குழு உறுப்பினர் கயிலைராஜன், மாநில துணைத்தலைவரான நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

தேசியம் என்பது

இதில் மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

தேசியம் என்பது இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு, ஒரே தேசம் என்று நினைக்க வேண்டும். தனி திராவிடநாடு இல்லை. தனி காலிஸ்தான் இல்லை. நாங்களும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகத்தான் பாடுபடுகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். இமயமலை முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த பூமியை நாங்கள் பராசக்தியாகவே பார்க்கிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் புனிதமானது.

ரத்த சகோதரர்கள்

நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் எனது ரத்த சகோதரர்கள் என்று எண்ண வேண்டும். அவர்கள் என்ன மொழி பேசினாலும், என்ன ஜாதியாக இருந்தாலும், என்ன உணவு சாப்பிட்டாலும் சகோதரர்களாக நினைப்பதே தேசியம். நமது நாட்டிற்கு அடிப்படையாக இருப்பதும் வேதங்கள்தான். நாம் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா கடவுளும் ஒன்று என்றுதான் நாம் சொல்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சிருஷ்டிகளும் அந்த ஆண்டவனுக்கே சொந்தம். உயிர்களை படைக்கும் ஆற்றல் இல்லாத எவருக்கும் அதை அழிக்கும் உரிமை இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சங்க மாநில இணைச் செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊடக செயலாளர் கொங்கு ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.


Next Story