ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விஷம் அருந்தினர்: கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை - 2 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விஷம் அருந்தினர்: கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை - 2 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த நீலாங்கரை செங்கேணி அம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ராம்குமார் (வயது 35). இவருடன் தாயார் மீனாட்சி (60), சகோதரி சந்தானமாரி (40), அவருடைய மகள் மோகனப் பிரியா(20) ஆகியோரும் ஒரே வீட்டில் வசித்தனர். ராம்குமார் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

நேற்று காலை 11.30 மணி அளவில் ராம்குமார் வீட்டில் இருந்து கூச்சல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு ராம்குமார் உள்பட 4 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தந்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழு பரிசோதனை செய்ததில் ராம்குமாரின் சகோதரி சந்தானமாரி, அவருடைய மகள் மோகனப்பிரியாஇருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ராம்குமார், அவருடைய தாயார் மீனாட்சி இருவரும் உயிருக்கு போராடுவதாக தெரிவித்தனர். உடனடியாக தாய்-மகன் இருவரையும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்த சந்தானமாரி, மோகனப்பிரியாஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராம்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாய் மீனாட்சியுடன் வசித்து வந்தார். ராம்குமாரின் சகோதரி சந்தானமாரியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகள் மோகனப்பிரியாவுடன் சந்தான மாரி, தனது சகோதரர் மற்றும் தாய் ஆகியோருடன் அதே வீட்டில் வசித்து வந்தார். ராம்குமாருக்கு அளவுக்கு அதிகமான கடன் இருப்பதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் வங்கி கடனும் அதிகமாக இருந்து உள்ளது. இதனால் விரக்தி அடைந்த 4 பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்து(விஷம்) தின்று உள்ளனர். அதில் மகளுடன், சந்தானமாரி இறந்து விட்டார். ராம்குமார், அவரது தாயார் இருவரும் உயிருக்கு போராடி வருவது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆன்-லைன் மூலம் கடன் பெற்று அதனை திருப்பி தராததால் ராம்குமார் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியதால் மனமுடைந்து குடும்பத்துடன் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story