நிதி குறித்த விவரங்களை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்


நிதி குறித்த விவரங்களை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்
x

நிதி குறித்த விவரங்களை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்

நாகப்பட்டினம்

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒதுக்கும் நிதி குறித்த விவரங்களை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

புருஷோத்தமதாஸ் (துணைத்தலைவர்): தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாணவர்களின் நலன்,கல்வி குறித்து தனி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

சாலையை சீரமைக்க வேண்டும்

கண்ணன் (தி.மு.க.): தேவூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் சந்தைக்கான கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கீழ்வேளூர் ஒன்றியத்தில் அரசின் சார்பில் கலைஞர் வீடு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் எடுக்கப்பட்டுவிட்டதா, மேலும் பட்டியலில் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் விடுபடாமல் கணக்கு எடுக்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலின் போது செய்யப்பட்ட செலவு தொகையில் ரூ.25 லட்சத்தை நான்கரை வருடங்களுக்கு பின் தற்போது ஒன்றிய பொது நிதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் இதை நிராகரிக்கின்றோம் என்றார். அப்போது (தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்பட) அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்தை நிராகரிப்பதாக குரல் கொடுத்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

தேன்மொழி (அ.தி.மு.க.): தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் வேலைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு இதுவரை தெரியப்படுத்துவது இல்லை. இது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிய படுத்த வேண்டும். அகரக்கடம்பனூர் ஊராட்சி கோவில், கடம்பனூர் ஆற்றங்கரை தெருவில் உள்ள மயானம் செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் அதை உடனே சீரமைக்க வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை

கருணாநிதி (தி.மு.க.) ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒதுக்கும் நிதி ஒன்றியத்தில் உள்ள எந்தந்த ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வடகரை ஊராட்சி வங்காரமாவடி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. அதற்கு தீர்வு காண வேண்டும்.

ரெங்கா (தி.மு.க.): வண்டலூர் ஊராட்சியில் இருந்து வடுகச்சேரி இடையே செல்லும் ஆற்றின் குறுக்கே 200-க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் உள்ளன. அந்த பகுதிக்கு செல்வதற்கு வசதியாக ஆற்றில் வண்டி பாலம் அமைத்து தர வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்்: ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் .இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரவினா, ரேவதி, வாசுகி, இல்முன்னிசா, ஹபிபுகனி, அலுவலக மேலாளர் முத்துக்குமரன், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story