உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று, மன்னார்குடி நகராட்சி கூட்டத்தில் தலைவர் கூறினார்.
மன்னார்குடி;
உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று, மன்னார்குடி நகராட்சி கூட்டத்தில் தலைவர் கூறினார்.
நகர சபை கூட்டம்
மன்னார்குடி நகரசபை கூட்டம் தலைவர் மன்னை. சோழராஜன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி பொறியாளர் குணசேகரன், மேலாளர் மீராமன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:- திருச்செல்வி (அ.ம.மு.க):- நகரின் கிழக்குப் பகுதியில் பாமணி ஆற்றின் கரையோரம் எரிவாயு தகன மேடை அமைத்து தர வேண்டும். ஏற்கனவே மேற்கு பகுதியில் உள்ள தகன மேடைக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தை தவிர்க்க கிழக்குப் பகுதியிலும் அமைத்து தர வேண்டும்.
ஆய்வு
பாரதி மோகன் (தி.மு.க.): கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் மூலம் வழங்கப்படும் பாலை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தி பாலில் தண்ணீர் கலக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.ஆர்.ஜி.குமார் (அ.தி.மு.க.): ஒத்தைத்தரு ஆனந்த விநாயகர் கோவில் குளம் துர்நாற்றம் வீசுகிறது. அதனை சுத்தப்படுத்தி நான்கு புறமும் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும். ருக்மணிபாளையம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
தடுப்புக்கம்பிகள்
புகழேந்தி (தி.மு.க): கீழப்பாலம் பகுதியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.ஐஸ்வர்யாலட்சுமி (திமு.க) : செங்குந்தர் முதலியார் தெருவில் தேசிய நெடுஞ்சாலை சாலைகள் உயரமாக போடப்பட்டதால் மழை நீர் தேங்கி தண்ணீர் நிற்கிறது. இதற்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.வெங்கடேஷ் (தி.மு.க.): பின்லே விளையாட்டு மைதானத்தின் இருட்டாக உள்ள வடக்கு பகுதிகளில் நகராட்சி மூலம் மின்விளக்கு அமைத்து தர வேண்டும்.பாலமுருகன் (தி.மு.க): தெப்பக் குளத்தின் நான்கு புறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளின் வேலையை துரிதமாக முடிக்க வேண்டும்.
நிலம்
ஏ.பி.அசோகன் (தி.மு.க.) வடுவூர் தொடங்கி மன்னார்குடி எல்லை வரை நகராட்சிக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலத்தில் தனியார் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததை சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ஆறு ஏக்கர் நிலத்தை மீட்ட நகராட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.சூர்யகலாராஜகோபால் (அ.தி.மு.க.) :காத்தாயி அம்மன் கோவில் தெரு தெற்கு வீதி சந்திப்பில் கழிவுநீர் வெளியாகிறது அதனை தடுக்க வேண்டும்.காத்தாயி அம்மன் கோவில் அருகே மழை நீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.
நிறைவேற்றப்படும்
உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் பேசும் பொழுது நகராட்சியின் மையப் பகுதியில் உள்ள சுகாதார கழிவுநீர் வடிகால் சந்துகள் கடந்த 40 வருடங்களாக சுத்தப்படுத்தாமல் இருந்ததை அனைத்தையும் சுத்தப்படுத்தி தற்போது ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 17 சுகாதார கழிவுநீர் சந்துகளை பேவர் பிளாக் சாலையாக மாற்றியமைக்கும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள ஆறு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும்.