அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை,

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியமாகும். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன் பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

2021-22-ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானிய கோரிக்கையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் பயிற்சியாளர்கள் தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சியின் தரம் உயர்த்த அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் நிறுவப்பட்டு எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும்.

பயிற்றுனர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்க தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதன்படி தற்போது 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 'தொழில் 4.0' தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், புனேவில் உள்ள 'டாடா டெக்னாலஜிஸ்' நிறுவனத்துக்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன.

'ரோபோட்டிக்ஸ்', 'இன்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன்', 'மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல்', 'அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங்', மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், 'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்', 'அடிட்டிவ் மேனுபேக்சரிங்', 'இன்டஸ்ட்டிரியல் பெயிண்டிங்', 'அட்வான்ஸ்டு வெல்டிங்' போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

முன்னணி நிறுவனங்களில் பணி

இதனால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்கள் ஆகியோரும் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ராமதுரை, தலைமை நிதி அலுவலர் சவிதா பாலசந்திரன், தலைவர் (அரசு திட்டங்கள்) சுசீல்குமார், மனிதவள மேலாண்மை தலைவர் பவன்பகேரியா, கல்வி மற்றும் திறன் மேம்பாடு இயக்குனர் புஷ்கராஜ்கால்குட் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story