வளர் இளம் பருவத்தினருக்கான மனநலம்-வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்


வளர் இளம் பருவத்தினருக்கான மனநலம்-வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்
x

வளர் இளம் பருவத்தினருக்கான மனநலம்-வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்

திருவாரூர்

திருவாரூர் காட்டூர் கோட்டத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான மனநலம்-வாழ்வியல் திறன் பயிற்சி முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

மனநலம்-வாழ்வியல் திறன் பயிற்சி

திருவாரூர் காட்டூர் கோட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கலைஞர் கோட்டம் தொடங்கிய பிறகு ஒரு துறையின் சார்பில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்றால், அது பள்ளி கல்வித்துறை கூட்டம் என்பது பெருமைக்குரியது.

ஆசிரியர் பணி சிறப்புக்குரியது

அதேபோல் மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் என்பதும் பள்ளி கல்வித்துறை நிகழ்ச்சி என்பது மிக பெருமையுடன் கூறி கொள்கிறேன். கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் பணி மிக சிறப்புக்குரியது.

மாணவர்கள் வளர் இளம் பருவத்தில் மனதில் பலவித யோசனை ஏற்படும். அதனை கட்டுப்படுத்தி வைத்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதன் மூலம் எந்தவித பிரச்சினைக்கு ஆளாகாமல் நமது இலக்கை சுதந்திரமாக சென்று அடைய முடியும். உங்களை நீங்கள் செதுக்கி கொண்டே இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்றால் ஒரு சிலையாகலாம். இல்லையென்றால் ஒரு சிற்பியாகலாம் என்பது தான் எனது அறிவுரை.

மாற்றத்தை ஏற்படுத்தும்

ஒவ்வொருக்கு மாணவருக்கும் ஒரு தனித்திறன் உள்ளதை வெளி கொண்டு வரவேண்டும். வளர் இளம் பருவம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதனை கட்டுப்படுத்தி நல்வழிபடுத்தினால் தான் நாம் வெற்றி பெற முடியும். மனதை கட்டுப்படுத்தி நல்வழிபடுத்துவதற்கு தான் இதுபோன்ற பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாநில கல்வி ஆராய்ச்சி-பயிற்சி இயக்குனர் லதா, மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில கல்வி ஆராய்ச்சி- பயிற்சி நிறுவன இனை இயக்குனர் குமார் வரவேற்றார். முடிவில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி நன்றி கூறினார்.


Next Story