ஐகோர்ட்டு வக்கீல் கொலை வழக்கில் கூலிப்படையினர் பரபரப்பு வாக்குமூலம்
அணைக்குடம் கிராமத்தில் நடந்த ஐகோர்ட்டு வக்கீல் கொலை வழக்கில் கூலிப்படையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கொலை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் கடந்த 7-ந் தேதி அன்று தனது தங்கை திருமணம் நடைபெற்ற சிறிது நேரத்தில் டீ கடை வாசலில் வைத்து ஐகோர்ட்டு வக்கீல் சாமிநாதன் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் கூலிப்படையினர் 6 பேர் சரணடைந்தனர். அதே நாளில் தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தா.பழூர் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி திருவையாறு கிருஷ்ணமூர்த்தி மகன் குருமூர்த்தி(21), கும்பகோணம் முகமது ரபீக் மகன் தமீம் அன்சாரி(35), நாச்சியார் கோவில் பிரபு மகன் தினேஷ்குமார்(27), திருநறையூர் முருகானந்தம் மகன் விஜய்(20) ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் நாச்சியார் கோவில் பாஸ்கர் மகன் தினேஷ்குமார்(23), திருநறையூர் செல்வம் மகன் கரன்(33) ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்ட 4 பேரையும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று தா.பழூர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதில் நாச்சியார் கோவில் கறிக்கடை செல்வமணி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கொலையில் தொடர்புடைய நாச்சியார் கோவில் மாரியப்பன், அவரது சகோதரர் ஐகோர்ட்டு வக்கீல் சாமிநாதன் ஆகியோர் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளனர். இவர்களில் முதலில் வக்கீல் சாமிநாதனை கொலை செய்ய கறிக்கடைக்காரர் செல்வமணியின் அண்ணன் இளையராஜா நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார். வக்கீல் சாமிநாதன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொந்த ஊரான நாச்சியார் கோவிலுக்கு வராமல் சென்னையிலேயே தலைமறைவாக தங்கி தனது வக்கீல் பணியை செய்து வந்துள்ளார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்ட இளையராஜா சாமிநாதன் ஊருக்கு திரும்பும் வரை காத்திருந்துள்ளார்.
அங்குலம் அங்குலமாக...
இந்நிலையில் சாமிநாதனின் தங்கை தையல்நாயகிக்கும், தா.பழூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதனுக்கும் திருமணம் செய்ய நிச்சயித்து திருமணம் அணைக்குடம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்ததும் நிச்சயம் சாமிநாதன் திருமணத்திற்கு வருவார் என கூலிப்படையோடு இளையராஜா மற்றும் செல்வமணியின் உறவினர்கள் காத்திருந்துள்ளனர். வக்கீல் சாமிநாதன் தனது தங்கை திருமணத்திற்காக முதல் நாள் இரவு கிளம்பி சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் தனி காரில் அணைக்குடம் கிராமத்திற்கு திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் வந்துள்ளார். சாமிநாதன் சென்னையில் இருந்து கிளம்பியது முதல் திருமண மண்டபத்திற்கு வந்தது வரை அங்குலம் அங்குலமாக கூலிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழியனுப்பி விட்டு...
அதுபோல் சாமிநாதன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியில் வரும் சந்தர்ப்பத்திற்காக கூலிப்படையை சேர்ந்த 8 பேர் அப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் காத்துக்கொண்டு இருந்துள்ளனர். திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து தன்னோடு காரில் வந்த நண்பர்களை அதே காரில் மீண்டும் சென்னைக்கு வழியனுப்பி விட்டு சம்பவம் நடந்த டீக்கடை நாற்காலியில் அமர்ந்திருந்த போதுதான் சாமிநாதன் கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
நடித்துக் காட்டினர்
சம்பவம் நடைபெற்றபோது 8 பேர் கூலிப்படையாக சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தா.பழூர் வழியாக கும்பகோணத்திற்கு சென்றதாகவும், மீதமுள்ள 6 பேரும் சிலால் உடையார்பாளையம் வழியாக தத்தனூர் சென்று அங்கிருந்து பஸ் மூலமாக திருச்சி சென்று விட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் திருச்சி தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும், போலீசார் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தியதால் சரணடைந்ததையும் ஒப்புக்கொண்டனர். சம்பவ இடத்தில் நேற்று முன்தினம் தத்ரூபமாக அவர்கள் நடித்துக் காட்டினர். பின்னர் விசாரணை முடிவில் நேற்று மாலை 5 மணி அளவில் ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.