வாரச்சந்தையில் வியாபாரிகள் தர்ணா


வாரச்சந்தையில் வியாபாரிகள் தர்ணா
x

கம்பம் வாரச்சந்தையில் வியாபாரிகள் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

கம்பம் நகராட்சியில் கலைஞர் நகர்புற திட்டத்தின் கீழ் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.7.75 லட்சம் செலவில் புதியதாக 262 கடைகள் கட்டப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாரச்சந்தையில் கடை அமைப்பதற்காக வந்த வியாபாரிகள் கட்டுமான பணிகளால் இடையூறு ஏற்படுவதாகவும், கடை அமைப்பதற்கான இடம் இல்லை என கூறி வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் நாகராஜ் நேரில் வந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இதுகுறித்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் என்ஜினீயர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாரச்சந்தைக்கு வந்தனர். அவர்கள் வியாபாரிகளை அழைத்து பேசினர். அப்போது வாரச்சந்தையில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. எனவே தற்காலிகமாக வாரச்சந்தை இயங்குவதற்கு தெற்கு புறத்தில் நகராட்சிக்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் வியாபாரிகளுக்கு கடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் கட்டுமான பணிகள் முடியும் வரை வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், கட்டிட பணி முடிவடைந்த பின்பு, வாரச்சந்தை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.


Next Story