வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
சங்கரன்கோவிலில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஒருவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பழைய பஸ் நிலையத்தை சீரமைத்து அங்குள்ள காய்கறி கடையை தனியார் நடத்திவரும் டைல்ஸ் கடையில் இயங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் அந்த கடைக்கு `சீல்" வைத்தது. இதைத்தொடர்ந்து எந்தவித முன்அறிவிப்பும் இன்றி `சீல்' வைத்ததாக சங்கரன்கோவில் வியாபாரிகள் சங்க தலைவர் முத்தையா தலைமையில் திருவேங்கடம் சாலையில் உள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது சம்பந்தமாக நகராட்சிக்கு சென்று மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் நகராட்சியை முற்றுகையிட்டனர். இதன்பின்னர் அங்குள்ள அலுவலகத்தில் நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா மற்றும் உறுப்பினர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 15 நாட்களில் கடையை காலி செய்வதாக வியாபாரிகள் தரப்பில் உறுதி அளித்தனர். பின்னர் வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு திரும்பினர். இதனால் திருவேங்கடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.